சுப்பிரமணியம் வடிவேல்
பாவற்குளம் - வவுனியா
சிங்கள படைகளின் போர்முனைத் தளங்களில் அதிகம் உயரமில்லாத மிகமிக மெலிந்த ஓரல்முகமும் மினுங்கும் கண்ணும் கொண்ட சிற்றுருவம் ஒன்று நடுநிசியில் உலாவித் திரியும். கழுத்தில் ஒரு நீள வெள்ளைப் பல்லிருக்கும். ஒருமுறை கண்டுவிட்டு மறுவேளை பார்த்தால் மறைந்துவிடும். சுட்டால் சூடுபிடிக்காது. வருவதுபோல் தெரிந்தால் பின் எப்படிப் போனதென்று தெரியாது. ஆயிரம்பேர் வைத்துத் தேடினாலும் கண்ணுக்குள் புலனாகாது. இப்படியொரு பிசாசு சிங்கள இராணுவத் தளத்தில் உலவுவதாகக் கதையிருந்தால் அதுதான் வீரமணி.
வீரமணியிடம் தலைமுறை தலைமுறையாக சலிக்காது கேட்கக்கூடிய வீரக்கதையிருந்தது. கற்பனைக் கதையல்ல. அவனே நாயகனாயிருந்த கதைகள். விகடம் தொனிக்க அவன் அவிட்டுவிடும் கதைகள். பச்சைப் புளுகென்று பொடியள் பழிப்பாங்கள். ஆனால் அத்தனையும் உண்மையென்றும் தெரியும். என்ன கதைச் சுவாரசியத்திற்காகக் கொஞ்சம் வால் கால் வைப்பான். புதுப் பெடியளின் கல்விக்கூடமே அவன் கதைதான். இப்போது அவனின் கதையை எல்லாரும் சொல்லவேண்டியதாய் காலம் சபித்துவிட்டது.
கேடுகெட்ட சாவு எங்கள் வீரமணியை களமுனையில் சாவுகொள்ள முடியாமல் வெட்கம்கெட்ட தனமாய் கடற்கரையில் சாவுகொண்டது. அவனைக் களமுனையில் சந்திக்க சாவுக்கே துப்பில்லை, துணிச்சலில்லை. எப்படித்தான் துணிவுவரும். களமுனையில் இறுமாப்போடு இருக்கும் சாவைக் குனிந்து கும்பிடுபோடவல்லவா வைத்தான். அதற்கேது முள்ளந்தண்டு, அவனை எதிர்த்துநிற்க. பிள்ளையார் தன் கொம்பை முறித்துப் பாரதக்கதை எழுதியதுபோன்று அவன் சாவின் முள்ளந்தண்டை முறித்தல்லவா தன் குறிப்புப் புத்தகத்தில் வேவுத்தகவல் வரைந்துகொண்டு வருவான். எதையென்று சொல்வது.
மூத்த தளபதி பிரிகேடியர் பால்ராஜ் சொல்கிறார், புலிகளுக்கு இருட்டாயிருந்த கிளிநொச்சி படைத் தளத்தை வெளிச்சமாக்கிவிட்டவன் வீரமணிதான் என்று. அவர் என்னுடன் பகிர்ந்துகொண்டவற்றில் மறக்கமுடியாத கதையொன்று.
சத்ஜெய படை நடவடிக்கையின்போது புலிகள் கிளிநொச்சியிலிருந்து பின்வாங்கிய பின் படையினரின் கிளிநொச்சித்தள முன்னரங்கக் காவல்வேலியைக் கண்டுபிடிப்பதே கடினமாயிருந்தது. படையினரின் அவதானிப்பு நிலையங்கள், தொடர் சுற்றுக்காவல்கள் எனக் காவலரணுக்கு வெளியே எதிரி இயங்கிக்கொண்டிருந்தான். இது வழமையான எதிரியின் படையச் செயற்பாட்டிலிருந்து புதுமையானதாக இருந்தது. இதனால் தொடக்கத்தில் முன்னரங்கக் காவலரணைக் கண்டுபிடிப்பதே கடினமான பணியாயிருந்தது. நெருங்கவிடாது வெளியே செயற்பட்டுக்கொண்டிருந்த படையினர் தாக்கிக்கொண்டிருந்தனர். இந்த நிலமையில் படைத் தளத்தினுள்ளே என்ன நடக்கிறது, தளத்தின் அமைப்பு எப்படி, ஆட்தொகை என்ன, அதன் வலு என்ன, பீரங்கிகள் எங்கே எதுவுமே தெரியாது. வேவு வீரர்களால் உள்நுழைய முடியாதவாறு நெருக்கமான காவலரண் தொடரும் அதிக தடைகளும் ஏற்படுத்தப்பட்டிருந்தன. வேவுக்கான பல முயற்சிகள் தோல்விகண்டன. அப்போது அங்கே வீரமணி தேவைப்பட்டான். வீரமணியை அழைத்து, புதுமையான ஒரு உத்தியைப் பயன்படுத்தி உள்ளே அனுப்ப முடிவுசெய்யப்படுகிறது. அந்தச் சவாலான உத்திக்குச் சம்மதித்து உள்ளேபோக வீரமணி சில வீரர்களுடன் தயாராகினான்.
உள்ளே வெற்றிகரமாகச் சென்றுவிட்ட வீரமணியின் அணி, இரண்டாம் நாள் எதிரியால் சுற்றிவளைக்கப்பட்டு அடிவாங்கியது. அதில் அணி குலைந்து சிதறியது. வெளியே வேவுக்கு அனுப்பிய கட்டளைத் தளபதி பிரிகேடியர் பால்ராஜுக்கு செய்தி கிடைத்தது. உள்ளேயிருந்து எவரும் வரவில்லை. செய்தியுமில்லை. மறுநாளுமில்லை. நான்காம் நாள் இரு வேவுவீரர்கள் வந்துவிட்டார்கள். அவர்கள் அடிவாங்கியது, அணி குலைந்தது, தாங்கள் தப்பியது என்று நடந்ததைக் கூறினார்கள். வீரமணி இறந்திருக்கலாமென்று ஊகம் தெரிவித்தார்கள். ஐந்தாம் ஆறாம் நாளும் வீரமணி வரவில்லை. இனி உயிருடன் வீரமணி இருக்க வாய்ப்பில்லை. கொண்டுசென்ற உணவும் வந்தவர்களின் கையில்தான் இருந்தது. எனவே வீரமணி வீரச்சாவென்று தலைமைச் செயலகத்திற்குத் தகவல் அனுப்பினார் தளபதி. எட்டு, ஒன்பது என நாட்கள் நகர பத்தாம் நாள் கழித்துச் சுண்டிக்குளத்தில் சில பொதுமக்கள் காவலரணுக்கு வெளியே வந்த இரு படையினரைப் பிடித்துவிட்டதாகவும் அவர்கள் மயங்கிவிட்டதாகவும் தகவல் கிடைத்தது. அங்கே விரைந்தபோது அந்த படையினர் என்பது எங்கள் வீரமணியும் சக வேவுவீரனும் என்பது தெரியவந்தது. கிளிநொச்சியில் உள்நுழைந்து பதினொரு நாளில் சுண்டிக்குளத்தில் வெளிவந்த வீரமணி பெறுமதிவாய்ந்த தகவல்களோடும் சகிக்கமுடியாத வாழ்வனுபவத்தோடும் விலைமதிப்பற்ற படிப்பினைகளோடும் வந்தான். கிளிநொச்சி வரைபடத்தில் தளத்தின் அமைப்பை குறித்துக்கொடுத்தான் வீரமணி. புலிகளுக்குக் கிளிநொச்சி வெளிச்சமாயிற்று.
செத்துப் போனதாக இருந்த வீரமணி எப்படிச் சாகாமல் இருந்தான. அவனைப் பெற்றவள் அறியக்கூடாத கதைகள் அவை. அடிவாங்கி அணி குலைந்த பின் உடம்பில் தெம்பிருந்த இருநாளும் தளத்தைச் சுற்றிப்பார்த்துக் குறிப்பெடுத்தானாம். வெளியே வர முயன்றபோது முடியாமல் போனதாம். ஓவ்வொரு நாளும் வெளியேற புதிய இடந்தேடி அலைந்தானாம். தெம்பிழந்த உடலோடு பசியையும், தாகத்தையும், மயக்கத்தையும் துரத்தித்துரத்தி நகர்ந்தானாம். பச்சைப் பனம்பழத்தைத் தின்றும் தங்கள் மூத்திரம் குடித்தும் தகவல் கொண்டுவந்து சேர்த்தான். மயக்கம் தெளிந்து மறுநாள் வேண்டியதை வரைபடத்தில் குறித்துக் கொடுத்தான். இருண்டிருந்த கிளிநொச்சி புலிகளுக்கு வெளிச்சமானது இப்படித்தான்.
சிறிலங்காவின் 50வது விடுதலை நாளிலில் கிளிநொச்சியிலிருந்து தலதாமாளிகைக்கு பேரூந்து விடுவோம் என்ற சிங்கள மமதைக்கு மூக்குடைக்க கிளிநொச்சியைத் தாக்கி நகரின் முற்பகுதியைக் கைப்பற்ற மூலகாரணமாக இருந்தவன் இவன்தான். ஓயாத அலை - 02இல் கிளிநொச்சித் தளத்தைத் தாக்கியழிக்க வேவு தொடக்கம் சமரில் மையத்தளத்திற்கான தாக்குதல் வரை முக்கிய பங்கெடுத்த வீரமணிக்கு கிளிநொச்சி விடுதலையில் உரிமையுண்டு. தொண்ணூறின் பின் வன்னியில் அவன் காணாத போர்க்களமும் இல்லை, இவன் வேவுபார்க்காத படைத்தளமும் இல்லை.
ஒரு போராளி சொன்னான். ”என்னைப் பத்தைக்குள்ள இருக்கச் சொல்லிவிட்டு மனுசன் கைக்குண்டோட கிளிநொச்சி கண்ணன் கோயிலுக்குப்போற றோட்டக் கடந்தான். கடக்கவும் சில ஆமிக்காரங்கள் முடக்கால வாறாங்கள். துலைஞ்சிது கதை. ஓடவேண்டியதுதான் எண்டு நினைக்க மனுசன் ஓடேல்ல. கைக்குண்டோட ஆமீன்ர பக்கம் பாய்ஞ்சு 'அத்த உசப்பாங்' என்று கத்தினார். வந்த ஆமி சுடுறதோ இல்ல அவற்ர கட்டளைக்குக் கைய மேல தூக்கிறதோ எண்டு தடுமாறிறதுக்கிடையில குண்டெறிஞ்சு வெடிக்கவைச்சார். அந்தத் திகைப்பிலிருந்து ஆமி மீளுறதுக்கிடையில என்னையும் இழுத்துக்கொண்டு மனுசன் பாய்ஞ்சிட்டான்." இது நடந்தது 1997இல். கிளிநொச்சி A9 பாதை பிடிப்புக்கான இறுக்கமான ஒரு கூட்டுத்தளமாக இருந்தபோது. 2000பேர் கொண்ட கூட்டுத்தளத்தில் பட்டப்பகலில் படைகள் அவனைச் சல்லடைபோட்டுத் தேடின. அவனைக் காணவேயில்லை. எங்காவது ஒரு பற்றையின் ஆழத்தில் உடலைக் குறுக்கி உயிரைப் பிடித்தவாறு பதுங்கியிருந்திருப்பான் என்றா நினைக்கிறீர்கள். வீரமணியைத் தெரிந்தால் அப்படி யாரும் நினைக்கமாட்டீர்கள். குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கச் சுகமென்று “குஷிக்” குணத்தோடு தளத்தைச் சல்லடைபோட்டுக் குறிப்பெடுக்கத் தொடங்கியிருப்பான்.
“மஞ்சுளா பேக்கரிச் சந்திக்கு இடக்கைப் பக்கமா கொஞ்சம் முன்னுக்கு பழைய சந்தைக்குப் பின்னால நாயுண்ணிப் பத்தை காடாக் கிடந்திது. நாங்கள் பகல் படுக்கைக்கு அந்த இடத்தத் தெரிஞ்செடுத்து குடைஞ்சுபோய் நடுவில கிடந்து துவக்கக் கழட்டித் துப்பரவு செய்துகொண்டிருந்தம். ஆமி றோட்டால 'ரக்ரரில' போனவங்கள், நிப்பாட்டிப்போட்டு இறங்கி வாறாங்கள். அவங்கள் பத்தையக் குடைஞ்சுகொண்டும் வாறாங்கள். நாயுண்ணிப் பத்தையின்ர கீழ்ச் சருகெல்லாம் கொட்டுப்பட்டு கீழ வெளியாயும் மேல பத்தையாயுமிருந்தது. அவங்கள் கண்டிட்டாங்கள் எண்டு நினைக்க, இந்த மனுசன் 'அறுவார் நித்திரைகொள்ளவும் விடாங்கள்போல கிடக்கு'. எண்டு குண்டுக் கிளிப்பக் கழட்டினபடி முணுமுணுத்தான். பிறகு பாத்தா அவங்கள் எங்களச் சுத்தியிருந்த மரந் தடியள இழுத்துக்கொண்டுபோய் ரக்ரர் பெட்டியில ஏத்திறாங்கள், விறகுக்கு. வீரமணியண்ண ஒண்டுக்கும் கிறுங்கான். எங்கையும் சிரிப்பும் பகிடியும்தான்."
"வீரமணி அண்ணையோட வேவுக்குப் போறதெண்டால் எந்தப் பதட்டமும் இல்லை. படுத்தால், எழுந்தால், நிண்டால், நடந்தால் ஒரே பகிடிதான். சாகிறதெண்டாலும் மனுசன் சிரிப்புக் காட்டிப்போட்டுத்தான் சாவான்." சொல்லிப்போட்டு வானத்தைப் பார்த்தான் அவன் ''ச்சா வீணா இழந்திட்டம்.''
வீரமணியோடு நின்றவர்கள் கதை கதையாகச் சொல்கிறார்கள். வீரமணி இல்லை என்றது மனதில் ஒட்டிக்கொள்ளவே மறுக்கிறது. அவர்கள் சொல்வதைக் கேட்டால் போர்க்களத்தில் வீரமணியைச் சாகடிப்பது சாவுக்கு முடியாத காரியம் எனத் தெரியும்.
வேறொரு போராளி சொன்னான், “மன்னாரில் எடிபல நடவடிக்கைக்கு முன் ஒருநாள் ஆமியின் தளத்தினுள் நுழைவதற்காகப் போய்க்கொண்டிருந்தோம். ஒரு பெரும் வெட்டையையும் நீரேரிப் பக்கவாட்டையும் கடந்து சென்றுவிட்டோம். இராணுவத்தின் தடைக்குள்போக (மிதிவெடி, முட்கம்பிவேலி கொண்ட பிரதேசம்) இன்னும் கொஞ்சத்தூரம் இருந்தது. அதைக் கடந்துதான் காவலரண்களை ஊடறுத்து உள்ளே போகவேண்டும். ஆனால் இப்போதே எங்களைக் கண்டுவிட்டு எதிரியின் ஒரு அணி காவலரணுக்கு வெளியே இடப்புறமாக நகர்ந்தது. எதிரி எம்மைக் கண்டுவிட்டு சுற்றிவளைக்கிறான் என்பதை வீரமணியண்ணை கண்டுவிட்டான். எங்களுக்குப் பின்னால் பெரிய வெட்டை. வலப்புறம் நீரேரி. இடப்புறம் இராணுவ அணி சுற்றிவளைக்கிறது. திரும்பி ஓடுவதுதான் ஒரே ஒரு மார்க்கம் என நான் நினைத்திருக்க, வீரமணியண்ண “ஓடுங்கடா தடைக்குள்ள” என்றுவிட்டு இராணுவக் காவலரண் தடைக்குள் ஓடினான். முட்கம்பிகளுக்கும் மிதிவெடிகளுக்கும் இடையில் நாம்போய் இருந்துகொண்டோம். சுற்றிவளைத்த இராணுவ அணி எங்களைத் தேடியது. நாம் எப்படி மறைந்தோமென்று அவனுக்குத் திகைப்பு. இப்படியும் ஒரு உத்தியிருப்பதை அன்று வீரமணியண்ணையிடம் படித்தேன். சுற்றிவளைத்த அணி தளம் திரும்புமுன் நாங்கள் காவலரண்களைக் கடந்து உள்ளே நுழைந்துவிட்டோம்.” எதிரியால் இதை கற்பனை செய்யவும் முடியாது.
வீரவணக்க குறிப்பேட்டில் நினைவுக்குறிப்பு எழுதுகிறார் மூத்த தளபதி பிரிகேடியர் பால்ராஜ். “ஒரு தடவை, ஆனையிறவு முகாமை வேவு பார்க்கவென எதிரியின் காவலரணை ஊடறுத்துச் செல்ல ஆறு தடைகளைக் கடந்த வீரமணி இறுதியாக மண் அணையைக் கடக்க முயன்றபோது ஆமி துவக்கை நீட்டினான். உடனே வீரமணி சிங்களத்தில் ஏதோசொல்லி வெருட்ட அவன் சுடுவதை நிறுத்துகிறான். எதிரியின் குகைக்குள்ளேயே நின்று எதிரியைச் சுடவேண்டாமெனக் கட்டளையிட்டு எதிரியின் பிரதேசத்தை வேவு பார்க்கச் சென்றவன் வீரமணி.”
இப்போது சாள்ஸ் அன்ரனி சிறப்புத் தளபதி கோபித் சொன்னார், “வீரமணியினுடைய தலைமையில் வேவுபார்க்கச் சென்றோம். திரும்பிச் சுட்டதீவால் வந்துகொண்டிருந்தபோது தண்ணிக்குள்ளால் நீரேரியைக் கடந்துதான் போகவேணுமெண்டு வீரமணி சொன்னான். நடக்கக்கூடிய காரியமா? மிகச் சுலபமா ஆமி காணுவான். பிரச்சினை என்னெண்டா தண்ணீன்ர நடுவுக்குள்ள குத்தி நட்டு பரண் கட்டி ஆமீன்ர அவதானிப்பு நிலையமொன்று இருந்தது. அதில இருந்து பார்த்தா தண்ணிக்குள்ள மீன் துள்ளினாலும் தெரியும். கரையில எலி ஓடினாலும் தெரியும். என்னெண்டு போறது உதுக்குள்ளால எண்டு கேட்டன். “வா. அவன் ஒண்டும் செய்யான்” என்று சொல்லிவிட்டு முன்னே நடந்தான். நேர ஆமீன்ர பரணைநோக்கி நடந்து பரணுக்குக் கீழயும் வந்திட்டம். நடுக்கமாயிருந்திது. நாங்கள் கீழ வரவும் ஆமி பரண்கால் குத்தியில தட்டினான். நின்றுவிட்டு வீரமணி ஏணியால ஏறி “கௌத” என்றான். பின் ஆமியோட சிங்களத்தில ஏதோ சொல்லிவிட்டு இறங்கிவந்தான். எங்களுக்கு நெஞ்சுக் குழிக்குள் நீர் வற்றிப்போயிற்று. ரெண்டுபேர் கிடக்கிறாங்கள் ஒருத்தன் இருக்கிறான் என்று சொன்னான். தளம் திரும்பியதும் அவனிடம் கேட்டோம் வீரமணி சொன்னவை மிகப்பெரும் வேவுப் பாடநெறிகள்.
”எங்களுக்கு ஆபத்து வருமென்றால் அதை எதிரியின் காலுக்குள்ளபோய் நின்று ஆபத்தை பெருப்பித்துக் கொண்டால் ஆபத்தேயில்லை. இது மிகக் குழப்பமாக இருந்தாலும் வீரமணி சொல்லித்தந்த பாடம் அதுதான். வேவுக்காரர்களைப் பொறுத்தவரை எங்களைச் சுட்டால் தானும் சாகவேண்டுமென்ற நிலையை எதிரிக்குத் தோற்றுவித்தால் அவன் தன்னைக் காப்பாற்ற முடிவெடுப்பானே தவிர எங்களைக் கொல்லவல்ல. தூரத்தே நாங்கள் நகர்ந்தால் அவன் அணிகளை ஒருங்கிணைத்து எங்களைத் தாக்க முயற்சிப்பான். எந்தப் போர்வீரனும் தான் சாகாமல் எதிரியைக் கொல்லத்தான் விரும்புவான். தனது சாவும் நிச்சயம் எங்களுடைய சாவும் நிச்சயமென்றால் இந்தச் சிங்கள ஆமி சுடான்.” வீரமணியுடன் இருந்தாலே போரில் எத்தனையோ நுட்பங்களையும் நூதனங்களையும் படித்துக்கொள்ளலாம். அவன்தான் இல்லையே.
வீரமணியின் பலம் என்னவென்றால் அவனுக்கு ஆமியைத் தெரியும் என்பதுதான். ஆமி எப்பொழுது என்ன செய்வான், என்ன செய்யமாட்டான், பலமென்ன, பலவீனம் என்ன, எந்தநேரம் என்ன தீர்மானம் எடுப்பான் என்பது வீரமணிக்கு நன்றாகத்தெரியும். ஏனென்றால் அவன் எதிரித் தளங்களுக்குள் வாழ்ந்தகாலம் அதிகம். ஆமிக்காரனின் அந்தரங்கமான “கசமுசா”க்களையும் வப்புக் கதையாக்கி எப்பொழுதும் தன்னைச்சுற்றிச் சிரிக்கும் கூட்டத்தை வைத்திருப்பான்.
இவனது வேவுத்திறமையும் சண்டையில் தன் அணியினரைத் துணிச்சலும் நம்பிக்கையும் கொண்டவர்களாக வழிநடத்தும் ஆளுமையையும் பார்த்த மூத்த தளபதி பிரிகேடியர் தீபன் இவனை ஒரு போர்முனைத் தளபதியாகத் தலைவருக்கு அறிமுகம் செய்தார்.
ஓயாத அலை - 03 ஒட்டுசுட்டானில் தொடங்கியபோது தன் அணிப் போராளிகளுடன் புறப்படு தளத்தில் வைத்து வீரமணி கதைத்தான் “பெடியள்! நான் ஒன்றச் சொல்லித்தாறன் ஞாபகம் வைச்சிருங்கோ. தடையள உடைச்சுக்கொண்டு ஆமீன்ர காப்பரணுக்க குதிச்ச உடன “அத்த உசப்பாங்” என்று பலத்துக் கத்துங்கோ. ஆமி கையைத் தூக்கேலையென்றால் குண்டை எறிஞ்சிட்டுச் சுட்டுப் பொசுக்குங்கோ. ஞாபகம் வைச்சிருங்கோ ஆமிய சரணடையச் சொல்லுறத்துக்கு “அத்த உசப்பாங்” என்று சொல்லவேண்ணும்” இப்படி சண்டை தொடங்கமுன் பொதுவாக போராளிகளிடம் இருக்கக்கூடிய இனம்புரியாத பதட்டம் அழுத்தம் என்பவற்றிற்குப் பதிலாக ஆர்வத்தையும் துணிச்சலையும் தூண்டிவிடும் உளநுட்பம் வீரமணிக்குத்தான் கைகூடிவரும்.
ஓயாத அலை - 03இல் ஆனையிறவுத் தளத்தைத் தாக்கியழிக்க முடிவு செய்தபோது மையப்பகுதியைத் தனிமைப் படுத்துவதற்காக முதல்கட்டத்தில் பரந்தன் உமையாள்புரத்தையும் பக்கவாட்டாக வெற்றிலைக்கேணியையும் கைப்பற்ற தலைவர் திட்டமிட்டார். ஆனால் வெற்றிலைகேணி புல்லாவெளி கைப்பற்றப்பட பரந்தன் தாக்குதலோ வெற்றியளிக்கவில்லை. பின்னர் கட்டளைத் தளபதி பிரிகேடியர் தீபன் தலைமையில் பரந்தன் மீது தாக்குதல் தொடுக்க முடிவுசெய்யப்பட்டது. பகலில் சமரைத் தொடங்கத் தலைவருடன் ஆலோசித்து வந்த பிரிகேடியர் தீபன் அத்தகைய ஓரு அபாயமான சமரைத் தொடங்க வீரமணியை அழைத்தார். ஆட்லறி, ராங்கிகளை வழிநடத்தும் ஒரு மரபுப்படைக்கு அதுவும் தற்காப்புப்போரில் மிக வசதியாக இருக்கும். ஆனாலும் பகலில் சமரை எதிர்பார்க்காத எதிரி மீது முதல்முறையாகச் செய்யப்படும் பகல்பொழுதுத் தாக்குதல் வெற்றியளிக்க வாய்ப்புள்ளது என தளபதி தீர்மானித்தார். ஓயாத அலைகள் இரண்டில் எதிரியின் முறியடிப்பை மீள முறியடிக்க ஒரு எத்தனிப்பைச் செய்து வெற்றி காணப்பட்டது. அதில் ஒரு அணித் தளபதியாக களமிறங்கியவன் வீரமணி. இப்போது பகலில் தொடங்கப்படும் சமரிற்கு வீரமணியை ஒரு பகுதித் தலைவனாக நியமித்தார் தளபதி தீபன். வீரமணி சென்றான் வென்றான்.
கட்டளைத் தளபதி தீபன் சொல்கிறார். “அந்தத் தாக்குதலின் ஒரு கட்டத்தில் வீரமணி பிடித்த காவலரண்களை எதிரியின் ராங்கியணி வந்து சுட்டுப் பொசுக்கிக் கொண்டிருந்தது. அந்த இடத்தில் வீரமணிக்குள்ள தெரிவு, அணிகளைப் பாதுகாப்பாகக் கொண்டு பின்வாங்கவேண்டும் அல்லது காப்பகழிகளிலிருந்து வெளியேறி ராங்கிகளை எதிர்கொள்ள வேண்டும். வீரமணி தன் சிறிய அணியை வைத்து அந்த ராங்கி அணியை முறியடித்தான். அதுதான் வெற்றியை எங்களுக்குத் தந்தது. ஒரு பகல் பொழுதில் பரந்தன் எங்கள் வசமாயிற்று.”
ஓயாத அலைகள் மூன்றில் தென்மராட்சிக்குள்ளால் நுழைந்த புலிகள் யாழ். அரியாலை வரை முன்னேறியிருந்தனர். யாழ். அரியாலையில் வீரமணி தன் அணிகளுடன் நிலைகொண்டிருந்த போது புதிதாக யாழ். தளபதியாக நியமனம் பெற்ற சரத் பொன்சேகா “கினிகிர” என்ற ஒரு படை நடவடிக்கையை அரியாலை ஊடாகத் தொடக்கினார். வீரமணி தன் அணிகளோடு அதற்கு எதிராகச் சண்டையிட்டான். தகவல் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி சிறப்புத் தளபதிக்குக் கிடைத்தது. அவர் விரைந்து அங்கே போகவும் அதற்கிடையில் அந்த நடவடிக்கையை வீரமணி முடிக்கவும் சரியாக இருந்தது.
நூற்றுவரையில் இராணுவ உடல்களும் பலநூறு காயமடைந்த படையினரும் கொழும்பிற்குப் போக தலைமையகத்தின் உத்தரவின்றித் தன்னிச்சையாகச் செய்யப்பட்ட நடவடிக்கையின் தோல்விக்காக சரத் பொன்சேகா யாழ். தளபதிப் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். வீரமணியை, அவனது தனித் திறமையைத் தலைவர் பாராட்டினார்.
வீரமணி புகழ்பூத்த சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் துணைத் தளபதியானான். பின்னர் அப்படையணியின் சிறப்புத் தளபதியுமானான். 1990ஆம் ஆண்டு மாங்குளத் தாக்குதலில் காவும் குழுவாக முதற் பங்கேற்றவன் 2001இல் தீச்சுவாலையில் சிறப்புத் தளபதியாக தன் ஐம்பதாவது களத்தைக் கண்டான். தன்னுடலில் எட்டுத்தடைவை காயமுற்றான்.
இறுதியாக நாகர்கோவில் களமுனைக்கு பகுதித் தளபதியாக இருந்தபோது போராளிகளைப் பார்க்க பலகாரம் கொண்டுசெல்லும் மக்கள்முன் வீரமணி பேசினான். “சரத் பொன்சேகாவின் யாழ். தளபதிப் பதவியை முதல் பறிச்சது நான்தான். இப்ப படைத் தளபதிப் பதவியில் இருந்து சண்டைக்குத் திமிறுறார். சண்டையைத் தொடக்கினால் இவரை இராணுவத்தை விட்டே கலைக்கவைப்பன்.”
வெயில் சரியாக சாய்ந்திராத ஒரு பின்னேரப்பொழுது. மக்களும் போராளிகளும் கிளிநொச்சி பண்பாட்டு மண்டபத்தில் திரண்டிருக்க, வீரமணியைப் பேழையில் படுத்தியவாறு தூக்கிவந்தார்கள். மனைவி வீரமணியைக் கட்டிப்பிடித்துக் கதறிக்கொண்டிருந்தாள். கூட்டத்தில் ஆங்காங்கே விம்மல்கள் வெடிக்கின்றன. விடுதலைப்போரில் ஐம்பது போர்க்களங்கள் கண்ட ஒரு அசகாய வீரன் அமைதியாய் படுத்திருப்பது எங்களை என்னவோ செய்தது. மூத்த தளபதி பரிகேடியர் பால்ராஜ் நினைவுரையாற்றினார். “கடலில் மீனுக்குக் குண்டடித்து வீரமணிக்குக் காயம் என்றார்கள். அதிர்ந்துபோனேன். சரி காயம்தானே என்றுவிட்டிருக்கக் கையில்லையாம் என்றார்கள். கையில்லாவிட்டாலும் பரவாயில்லை வரட்டும் என்றிருந்தேன். கொஞ்ச நேரத்தில் நிலைமை மோசமாக இருப்பதாகச் சொன்னார்கள். உயிர்தப்பினாலே போதுமென்று ஏக்கமாக இருந்தது. இறுதியாய் வீரமணி செத்துவிட்டான் என்று செய்தி சொன்னார்கள்.” சாவுக்குத்தான் மனிதர்கள் அஞ்சுவார்கள். சாவு வீரமணிக்கு அஞ்சி கோழைத்தனமாய் அவனைக் கொன்றுவிட்டது. எந்த இரக்கமும் தர்மமுமில்லாமல் மகத்தான ஒரு போர்வீரனைக் கடற்கரையில் வைத்து வீழ்த்திவிட்டது. நடமாடும் ஒரு வேவுக்கல்லூரி சத்தமில்லாமல் நொருக்கப்பட்டுவிட்டது. புதைகுழிக்கு மண்போட்டு எல்லாம் முடிந்தது. இனி வீரமணி வரமாட்டான் என்றது மனதில் திரும்பவும் உறைக்கின்றது.
வீட்டில் அந்தியேட்டிக்காகப் போயிருந்தோம். “தொப்” பென்று சத்தம் கேட்க உள்ளே என்ன நடந்தது என்று பார்த்தோம். வீரமணியின் படம் விழுந்து கண்ணாடி உடைந்துவிட்டது என்றார்கள். பக்கத்தில் இருந்தவர் சொன்னார். “படத்துக்கு அஞ்சலி செலுத்தேக்க படத்தில அவன் உயிரோட இருந்ததைக் கண்டனான். அவன் வெளியே வர எத்தனிச்சுத்தான் கண்ணாடி உடைஞ்சிருக்கவேணும்.” திரும்பி அவரின் முகத்தைப் பார்த்தேன். முகம் குலைந்து துயரத்தில் தொங்கியிருந்தது. எல்லோருக்கும் அதுதான் நப்பாசை. வீரமணி திரும்பி வந்தாலென்ன?
ஆனால் வன்னிக்களத்தில் நின்ற சிங்கள படையினரைப் பொறுத்தவரை இரவில் தங்கள் தளங்களில் அலைந்துதிரியும் மெல்லிசும், ஓரல் முகமும் இளைய வயதும் மினுங்கும் கண்களும் கழுத்தில் ஒரு நீள வெள்ளைப் பல்லும் கொண்ட மாயப்பிசாசு - சுட எத்தனித்தால் “அத்த உசப்பாங்” என்று கீச்சிடக் கத்திவிட்டு மாயமாய்க் குண்டை வெடிக்கவைத்து மறைந்துபோகும் மர்மப் பிசாசு செத்துப்போய்விட்டது. பிசாசுக்காகப் பிக்குவிடம் மந்திரித்துக் கழுத்தில் கட்டிய தாயத்து இனித் தேவையில்லை என்றும் அவர்கள் ஆறுதலடையக்கூடும்
- கு.கவியழகன்