சமர்க்கள நாயகர்கள்

சமர்க்களங்களை வெற்றிக்களங்களாக மாற்றிய இளநிலைத் தளபதிகளின் வீரவரலாறு

லெப்.கேணல் நிரோஜன்

லெப்.கேணல் நிரோஜன்

பாலசுப்பிரமணியம் கிருஸ்ணபாலன்
ஊர்காவற்துறை - யாழ்ப்பாணம்

கடலில் அவனொரு காவியம்

கால்கள் மணலிற்குள்ளால் நடந்து கொண்டிருந்தாலும் மனம் இப்போதும் கடலிற்குள்ளேயே நின்று கொண்டிருந்தது . கடலின் கரையைத் தொட்டு விட ஒவ்வொரு அலையும துடித்துக் கொண்டிருந்தது. இந்த அலைகளை போலவே இலட்சியத் துடிப்புடன் போராடி மடிந்த நிரோஜனின் நினைவுகள்தான் ஒன்றன்பின் ஒன்றாக எங்கள நெஞ்சில் அழியாத் தடங்களாகப் பதிந்திருக்கின்றன.

கடல் நீரும் துள்ளியெமும் அலைகளும் ஒரு பொழுதில் வாய் திறந்து பேசுமானால் இவனைப் பற்றி. இவன் சாதனைகளைப் பற்றி இவன் இறுதியாய் எப்படி மடிந்தான் என்பது பற்றி தெளிவாகச் சொல்லியிருக்கும். ஆனால், அவை இப்போது மெளனமாய் இருப்பதால் அந்தப் பணியை எனது எழுதுகோல் ஏற்றுக்கொள்கிறது. தமிழீழத்தின் கடல்நீரை உங்கள் கரங்களால் தொடும்போது அந்த நீருக்குள்ளும் இந்த நிரோஜனின் கதையிருக்கும்.

1990 இல் இயக்கத்தில் இணைந்து கொண்ட அவனின் கடற்பயணம் 1992 இல் தொடங்குகின்றது. அன்றிலிருந்து அவனுக்கும் இந்தத் தமிழீழக் கடலுக்கும் நெருங்கிய உறவு. அவன் புதியவனாக கடற்புலிகள் அணியில் இணைந்து கொண்டாலும் குறுகிய நாட்களுக்குள்ளேயே கடலில் நீண்ட கால பட்டறிவுள்ளவனைப்போல கடலின் நுட்பங்களைத் திறமையாக அறிந்திருந்தான். அந்த நாட்களில் அவனின் கடற்போரின் திறமையை வெளிக்கொண்டுவந்த அந்தக் தாக்குதல் நடைபெற்றது.

அது ஒரு சிறிய படகு. அந்தச் சிறிய படகில்தான் நிரோஜனின் கடல்வழி வழங்கல் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அன்று அந்தப் படகில் தரைப்படைத் தளபதி ஒருவரை ஏற்றியபடி நிரோஜன் படகை ஓட்டிக் கொண்டிருந்தான். அந்த இரவின் இருளில் சடுதியாக ஏற்பட்டது அந்த வெளிச்சம். தளபதியால் இபபோது என்ன செய்வதென்றே புரியாத போதிலும் நிரோஜன் நிதானமாகப் படகை ஓட்டிக்கொண்டிருந்தான். அது டோறாப் படகு என்பதை தெளிவாக அவனால் புரிந்து கொள்ள முடிந்தது. ஒரு டோராப் படகின் ஆயுதபலமும், நிரோஜனின் அந்தச் சிறிய படகின் ஆயுதபலமும் ஒப்பிட முடியாதது. ஆனாலும் அந்தக் கடலின் சாதகங்களை அறிந்து, சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சில சிங்களப் படையினரைக் கொன்றதுடன் அந்தத் தளபதியையும் பத்திரமாக கரைசேர்த்தான். கடற்புலிகளில் அவனது திறமை வெளிப்படுவதற்கு தொடக்கமாய் இருந்தது அந்தத் தாக்குதல்தான். அதன்பின் அவன் தீயில் சங்கமிக்கும் வரை கடலில் கடற்புலிகள் சந்தித்த முக்கிய போர்களில் எல்லாம் அவன் கலந்து கொள்ளாததென்று எதுவுமேயில்லை.

1996ம் ஆண்டு ஒக்டோபரில் ஒரு நாளின் அதிகாலைப் பொழுது சுண்டிக்குளத்திலிருந்தத கடற்புலிகளின் முகாமினை நோக்கி சிறிலங்கா வான்படை உலங்கு வானூர்திகளும், கடற்கலங்களும் நெருங்குகின்றன. அங்கே கடற்புலிகளுக்கும், சிறிலங்காவின் தரை, கடற்படைகளுக்குமிடையே சண்டை மூண்டது. அந்தத் தாக்குதலை திட்டமிட்டது சிங்களப்படை. அந்தத் திட்டத்தின்படி வெற்றி அவர்களுக்கே. ஆனால் அங்கு நடந்தது அதுவலல. சேதத்துடன் சிங்களம் தப்பியோடிக்கொண்டது. ஆனாலும் அது நிரோஜனின் மனதில் நீண்ட கோபத்தை எதிரிமீது ஏற்படுத்தியது. எங்களது வாசல் தேடிவரும் அளவிற்கு சிங்ளம் துணிந்தமை அவனுக்குச் சினத்தை ஏற்படுத்தியது . அவன் மனம் கொந்தளித்துக் கொண்டிருந்தது. இதற்குப் பதிலடி கொடுத்தே ஆகவேண்டும், சிங்கம் புலியைத் தாக்குவதற்கு புலியின் குகையைத் தேடிவந்தது. இப்போது சிங்கத்தின் குகையை நோக்கி புலி சென்றுகொண்டிருந்தது.

திருகோணமலைத் துறைமுகத்தை நோக்கி கட்டளைப் படகில் நிரோஜன் கடற்புலிகள் அணியை வழிநடத்திக கொண்டு முன்னகர்ந்து கொண்டிருந்தான். அவனுக்குத் துணையாக சண்டைப் படகுகளும், கரும்புலிப்படகுகளும் சென்றுகொண்டிருந்தன. அது திருகோணமலைத் துறைமுகத்தின் வாசல். அங்கே துறைமுகத்திலிருந்து டோறாக்கள் சண்டைக்குத் தயாராக வெளியே வந்தன. கடலில் தமக்குச் வாய்ப்பான பகுதியில் கடற்புலிகளின் படகுகள் வியூகமமைத்து கொள்ளச் சண்டை இப்போது பலமாக நடந்து கொண்டிருந்தது.

நிரோஜன் கட்டளைகளை வழங்கி கொண்டு எங்களது படகுகளின் வியூகங்களை மாற்றி மாற்றிச் சண்டைபிடித்தான். கரும்புலிப் படகுகளால் தாக்குவதற்கு வாய்ப்பை எதிர்பார்த்திருந்தவன் இப்போது அந்தக் கரும்புலிப் படகை டோறா நோக்கி நகர்த்தினான். அது டோறா மீது மோதி வெடிக்க டோறா கடல் நீரின் மேல் செயலற்று நின்றது . நிரோஜனின் கட்டளைப்படகு அந்த டோறாவை நெருங்கியதும், நிரோஜன் அந்த டோறாவில் பாய்ந்து ஏறி கொண்டான். அந்தப் படகின் முதன்மைச் சுடுகலனான 20மி.மீ. கனரக ஆயுதத்தை துரிதமாக கழற்ற முற்பட்டான நிரோஜன். டோறா கடல்நீரில் அமிழ்ந்து கொண்டிருந்தது. நிரோஜனுக்கு அந்த ஆயுதத்தைக் கையாண்ட பயிற்சி இல்லாதபோதும் டோறாப் படகு தாழுவதற்குள் அதைக் கழற்றி விட வேகமாக இயங்கினான். அந்தக் கனரக ஆயுதத்தின் சுடுகுழல் இப்போது அவனது கைகளில் இருந்தது . இதே நேரம் மற்றொரு டோறாப்படகு செயலிழந்த டோறாவைக் குறி வைக்க நிரோஜனின் கட்டளைப் படகு மறுபக்கத்தால் திரும்பி அந்த டோறாவைத் தாக்க, நிரோஜன் அந்தக் கனமான சுடுகுழலுடன் கடலிற்குள்ளால் நீந்தினான். அதன் சுமை அவன் உடலை கடலிற்குள் அமிழ்த்தினாலும் அதைக் கைவிடாது . நீந்திப்படகேறினான். சிங்கத்தை அதன் குகையில் சந்தித்துத் தாக்கிய நிறைடன் புலி தளம் திரும்பிக் கொண்டிருந்தது.

இப்போது தமிழீழ விடுதலைப் புலிகள் என்னும் தமிழர் தேசியப் படையின் கடற்படைத் துணைத் தளபதி அவன். அந்தப்பணியை பொறுப்பேற்றதிலிருந்தே தமிழீழம் கடற்பரப்பில் சிங்களக் கடற்படையின் பலத்தை சிதைக்கும் தாக்குதல்களை மேற்கொள்வதும், கடல் மூலமான வழங்கல் பணிகளை மேற்கொள்வதும் தான் அவனது நோக்கமாக இருந்தது. அவன் தரையில் கழித்த நாட்களைவிட கடலிற் கழித்த நாட்கள்தான் அதன்பின் அதிகமாக இருந்தது.

கடலில் வழங்கல் பணியை மேற்கொள்ளும் போது சிங்களக் கடற்படையின் டோறாக்கள் வழங்கல் படகுகளை வழிமறிக்கும். அந்த வேளைகளிலெல்லாம் குறைந்த படகுகளை வைத்து எதிரியின் கூடிய படகுகளைத் தடுத்து வைத்துத் தாக்குதல்களை மேற்கொள்வதில் வல்லவன் நிரோஜன்.

இப்படித்தான் ஒருவேளையில் வழங்கல் பணிகளை மேற்கொண்ட படகுகள் சிங்களக் கடற்படையின் தாக்குதலிற்குள்ளாகின. 50 கடல் மைல்களிலிருந்து நிரோஜனின் இரு படகுகள் அந்தக் கடற்களத்தை நோக்கி விரைகின்றன. இடையில் அந்த இந்த படகுகளையும் ஏழு டோறாக்கள் வழிமறிக்கின்றன. இப்போது நிரோஜன் அந்தக் கடற் சூழலுக்கேற்றவாறு டோறாக்களை எதிர்கொள்ளத் தயாராகிறான். “மயூரன்" படகு நான்கு டோறாக்களை எதிர் கொள்ளத் “தேன்மொழி” படகு மூன்று டோறாக்களை எதிர்கொள்கிறது.

அங்கே அந்தச் சிறிய படகுகள் இரண்டும் அந்த ஏழு டோறாககளுக்கும் போக்குக்காட்டி முன்னேறிக் கொண்டிருந்தன. இறுதியாக அந்த வழங்கற் படகுகளை மீட்டுக் கொண்டு தளம் திரும்பின கடற்புலிப் படகுகள். 

இப்படித்தான் எமது படகுகளின் பலம் குறைவானபோதும் நிரோஜனின் நிதானமானதும், சாதுரியமானதும் உறுதியானதுமான கட்டளைகள் எதிரியின் திட்டங்களைச் சிதறடிப்பதுடன் கடற்புலிகளின் பணியைச் சரிவர மேற்கொள்ளவும் வழிசமைத்துக் கொண்டிருந்தது .

இந்த நாட்களில்தான் சிறிலங்காவின் அமைச்சரொருவர் “யாழ்ப்பாணத்தில் உள்ள படையினருக்கு கடல்வழி மூலமான வழங்கலே பலமாக உள்ளது'' என்று தெரிவித்தார். இது நிரோஜனின் காதுகளுக்கெட்டியதுமே சிறிலங்கா கடற்படைக்குத் தகுந்த பாடம் புகட்ட வேண்டுமென முடிவெடுத்துக்கொண்டான். அடுத்து வந்த காலத்தில் ஒரு நாள் யாழ்ப்பணத்தை நோக்கி சிறிலங்கா கடற்படையின் கப்பற்தொகுதி ஒன்று சென்றுகொண்டிருந்தது. அந்தக் கப்பற் தொகுதி முல்லைக் கடற்பரப்பைத் தாண்டிக் கொண்டிருக்கும் போது நிரோஜனின் கட்டளைக்குக் கீழ் கடற்புலிப் படகுகள் களமிறங்கின.

மூன்று சண்டைப் படகுகளும் இரண்டு கரும்புலிப் படகுகளும் அலைகளை ஊடறுத்து மேல் நோக்கிச் சென்று அந்தக் கப்பல் தொகுதியை மேவி வந்து கொண்டிருந்தன. ஆனால் அன்றைய நாளில் எங்களது படகுகளின் பலத்தைவிட பன்மடங்கு அதிகரித்திருந்தது எதிரியின் பலம். ஆறு டோறாக்களும், நான்கு படகுகளும் பாதுகாப்பு வழங்க வலம்புரிக் கப்பலும், பபதாக் கப்பலும் அதனுடன் சேர்ந்து ஒரு தரையிறங்கு கலமும் சென்று கொண்டிருந்தது . எதிரியின் பலத்திற்கு மிகக் குறைவான ஆயுதபலமும், கடற்கலங்களின் பலமும் இருந்தபோதும் அசாத்தியமான துணிச்சலும், சண்டையை வழி நடத்தும் தளபதியின் திட்டமிடலும் எங்கள் பக்கத்தில் அதிகமாயிருந்தது.

இப்போது எதிரியின் கப்பற்தொகுதியை இலக்கு வைத்து பின் தொடர்ந்தன கடற்புலிப்படகுகள். ஆனால் எதிரியிடம் அத்தனை பலமிருந்தபோதும் அவை சண்டை பிடிக்கப் பயந்து வேகமாகச் சென்று கொண்டிருந்தன. நிரோஜன் கட்டளைகளை வழங்க அந்தக் கப்பல்களை நோக்கி படகுகள் நெருங்கிச் சென்றன. எங்கள் கடற்தளபதியின் வியூகம் அமைப்பிற்கேற்றவாறு படகுகள் எதிரியின் கப்பற்தொகுதியை நெருங்கியதும் கடற்புலிகள் தாக்குதலை தொடக்கி வைத்தனர். அவை அப்போதும் தொடர்ந்து சென்று கொண்டிருந்ததால் முற்றிலும் சாதகமற்றதும், எதிரியின் வலயத்திற்குள்ளும் சென்ற கடற்புலிகளின் படகுகள் பருத்தித்துறைக்கு நேரே நடுக்கடலில் கடுமையாகச் சண்டை நடந்து கொண்டிருந்தது . கரையிலிருந்து நீணடதூரம் சென்றுவிட்டதால் முற்று முழுதாகவே கடற்புலிகளின் சிறப்புத் தளபதியுடன் தொடர்பு துண்டிக்கப்பட களத்தில் நின்றபடியே சண்டையை வழிநடத்தினான் நிரோஜன். உயர்ந்து எழுந்து வீழும் அலைகளுக்குள் நிதானமாக நிற்க முடியாத படகிற்குள் நின்று கொண்டும், சீறிவரும் துப்பாக்கிக் குண்டுகளுக்கு முகம் கொடுத்தும். நிதானமிழக்காது தெளிவாக கட்டளை பிறப்பித்தபடி அங்கிருந்த மூன்று படகுகளுள் ஒன்றில் நின்றான் நிரோஜன்.

அன்று எதிரியின் கப்பல்களை அழிக்காது தளம் திரும்புவதில்லையென்று உறுதியெடுத்து அவன் தன் தோழர்களுடன் சமரிட்டுக் கொண்டிருந்தான் . இறுதியாக எதிரியின் சுற்றிலிருந்த பாதுகாப்பு கலங்களை ஊடறுத்து “பபதா” கப்பல்மீதும், “வலம்புரி” கப்பல்மீதும் கரும்புலிப் படகுகள் மோதிவெடிக்க அவை எரிந்தபடியே கடலில் அமிழ்ந்து கொண்டிருந்தன. அந்த நிறைவுடன் எதிரியின் முற்றுகைக்குள் இருந்த கடல் எல்லைக்குள்ளிருந்து வெற்றிகரமாகத் திரும்பின கடற்புலிப் படகுகள்.

இந்தத் தாக்குதல் முடிந்தபின் மீண்டும் விநியோகப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தன. கடற்புலிப் படகுகள். எந்தப் படகுகளை வழிமறித்து டோறாப் படகுகள் தாக்குதலை மேற்கொள்ளத் தொடங்கியதும் கரையிலிருந்து படகுடன் விரைந்தான் நிரோஜன். “பிரச்சனையில்லை நான் கிட்ட வந்திட்டன், நீங்கள் வடிவாச் சண்டை பிடியுங்கோ'' தொலைத்தொடர்பு கருவியில் நிரோஜனின் குரல் ஒத்ததுமே கடற்களத்தில் சமர் புரிந்துகொண்டிருக்கும் போராளிகளுக்கு புது உத்வேகம் கிடைத்தது. அவர்கள் மூர்க்கமாகச் சண்டையிடத் தொடங்கினார்கள் .

நிரோஜன் கட்டளைகளை வழங்கியபடி சண்டை நடைபெற்ற கடற்பரபபை நெருங்கி டோறாப் படகுகளை விநியோகப் படகிலிருந்து பிரித்துத் தாக்குதலை மேற்கொண்டான். தொடக்கத்தில் எதிரியின் முற்றுகைக்குள் இருந்தன எமது படகுகள். இபபோது நிரோஜனின் முற்றுகைக்குள்ளாக மாறிக்கொண்டிருந்தன டோறாக்கள்.

நேரம் கடந்து கொண்டிருக்க சண்டை நிலை எமக்குச் சாதகமாக மாறியது. டோறாப் படகொன்றை இலக்கு வைத்து நெருங்கி கனரக துப்பாக்கிச் சூடுகளை வழங்க அது செயலற்று கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தது . சண்டையிட்ட எல்லாப் போராளிகளும் நிராஜனுடன் சேர்ந்து கடல் நடுவே உரத்துக் கூச்சலிட்டனர்.

ஆமாம் அன்று தான் ஒரு கடற்சண்டையில் ஒரு கரும்புலித் தாக்குதல் இல்லாது கனரக துப்பாக்கிச் சூட்டினால் ஒரு டோறா செயலிழக்கச் செய்யப்பட்டது . நிரோஜன் அந்த டோறாவை கடலில்  கைவிடவில்லை ஏனைய டோறாப் படகுகளுக்கு முகம் கொடுத்தவாறு செயலிழந்த டோறாவை எங்களது படகில் கட்டி இழுத்து வந்தான். அது இடையில் தானாகவே கடலில் மூழ்கத் தொடங்க அதிலிருந்த படைய கருவிகள் அகற்றப்படவும் அது நீருக்குள் முற்றாக அமிழ்ந்தது. இந்தத் தாக்குதல் மூலம் எல்லாக் கடற்புலிப் போராளிகளுக்கும் நிரோஜன் மீதும் அவன் திறமை மீதும் இருந்த நம்பிக்கை இன்னும் உச்சத்தை அடைந்தது. நிரோஜன் கடற்புலியில் இருந்து ஏழு ஆண்டுகளிலும் இப்படித்தான் பல சண்டைகளை தனது நிதானமான முடிவுகளாலும், நுட்பமான திட்டங்களாலும், நெருக்கடியான நேரத்தில் கூட பதட்டப்படாத செயற்பாடுகளாலும் செய்து வென்று முடித்தவன் . கடலில் சண்டை மூழும்போது கரையில் நின்று கட்டளை வழங்கும் போது அவர்கள் அவனின் திறமை மீதுகொள்ளும் நம்பிக்கையால் சண்டைகளை வழிநடத்தும் பொறுப்பு முழுமையாகவே அவனிடம் ஒப்படைக்கப்பட்டு விடும், அவன் வரலாற்றுக்குள் இப்படியான பல தாக்குதல்கள் நிறைந்து கிடக்கிறது . அவனுக்குள்ளே தமிழீழத்தின் கடல் வாழந்து கொண்டிருந்ததால் அவன் எப்போதும் கடலுக்குள் வாழ்ந்து கொண்டிருந்தான்.

இப்படித்தான் சண்டைகளிலெல்லாம் நெருப்பாகச் சீறும் அந்த நிரோஜனின் மறுபக்கம் இந்தச் சண்டைகளைப் போல கடினமானதும் கரடுமுரடானதுமல்ல. அவனின் இதயம் மென்மையானது . ஒவ்வொரு சணடைகளிலும் அவனுடன் படகிலிருந்து மடியும் போராளிகளின் நினைவால் சண்டை முடிந்ததும் வந்து தனியே இருந்து அழும்போது அவன் ஒவ்வொரு போராளிகள் மீதும் எவ்வளவு பாசம் வைத்திருந்தான் என்பது புலப்படும், அப்போது அவனை ஒரு கடற்படைத் தளபதியாகப் பார்க்க முடியாது. சண்டைகளின் வெற்றிகளால் அவன் மகிழ்ந்திருப்பதை விட இழந்த தோழர்களின் நீ கனவுகளால் அவன் மனம் உருகிப்போவதே அதிகம்.

அவன் சண்டைகள் இல்லாமல் முகாமில் நிற்கும்போது ஒரு சாதாரண போராளிக்கும் அந்த தளபதிக்கும் எந்த வேற்றுமைகளும் கிடையாது. அந்த வேளைகளில் அவனது முகாமுக்குச் சென்றால் நிச்சயமாக அவனை நீங்கள் பிரித்தறிய முடியாது. போராளிகள் எந்த வேலையில் ஈடுபட்டாலும் அவர்களுக்குள் ஒருவனாக அவனும் நிற்பது ழமையானது. விளையாட்டுக்கள் என்றால் கூட அப்படித்தான். விளையாட்டுக்களின் போது மிகவும் சுவாரசியமாக அந்த நேரத்தைக் கழிக்கும் தன்மை அவனுக்கே உரியது.

தொடர்ச்சியாக இரவு பகலாக பணிகள் நடந்து கொண்டிருந்த நாட்களில் போராளிகளை உற்சாகப்படுத்துவதற்காக விளையாட்டுப் போட்டி ஒன்றை நடாத்த கடற்புலிகளின் சிறப்புத்தளபதி திட்டமிட்டபோது அவன் விளையாட்டு அமைப்பாளர் குழுவிற்குள் செல்லவில்லை. அவன் போட்டியிடும் வீரர்களின் இல்லமொன்றில் அவர்களில் ஒருவனாகச் சேர்ந்து கொண்டான். அவன் அந்தப் போட்டிகளின் போது நீச்சல் போட்டியில் முதலிடத்தைப் பெற்று தலைவரிடம் பரிசும் பெற்று அந்த மகிழ்வில் தன் தோழர்களுடன் சேர்ந்து துள்ளிக் குதித்தான்.

அவனின் திறமை விளையாட்டில் மட்டுமல்ல. ஒரு கடற்படைத் தளபதிக்கு இநக்க வேண்டிய அத்தனை தகுதிகளுமே அவனிடம் திறமையான விதத்தில் காணபபட்டது. அவன் கடற்புலிகளின் படைத்துறைப் பள்ளிப் பொறுப்பாளனாக, தொழில் நுட்பக் கல்வி பொறுப்பாளனாக, ஒரு கப்பலின் முதன்மைப் பொறியிலாளனாக என பல பணிகளைச் செய்து முடித்த பின்னரே கடற்புலித் துணைத் தளபதியாக பொறுப்பெடுத்துக் கொண்டவன். ஆனாலும் இந்த இளம் தளபதி சிறிலங்கா கடற்படைத் தளபதி ஒருவனை விட பன்மடங்கு உயர்ந்தவன். ஏனெனில் அவன் சண்டைகளில் வென்றது கடற்கலங்களின் அதிகரித்த பலத்தினாலல்ல. உறுதிமிக்க போராளிகளின் நெஞ்சுரத்தை துணையாக்தி தனது நுட்மான திட்டமிட்ட தாக்குதலினால் மட்டுமே. அப்படி இல்லாவிட்டால் இந்தச் சண்டையில் அவன் வென்றிருக்கவே முடியாது

அன்றைய நாள் 07.01.1999 அன்று வழங்கல்பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தன கடற்புலிகளின் இரு படகுகள். அவற்றில் ஒன்றில் நிரோஜன் நின்றபடி படகுகளை வழி நடத்திக் கொண்டிருந்தான். கடலின் நடுவே இந்தப் படகுகளிரண்டையும் பலம் பொருந்திய நான்கு டோறாக்கள் முற்றுகையிடுகின்றன. சண்டை  மிக நெருக்கமாக நடந்து கொண்டிழுந்தது . மாலை மங்கிய பொழுதில் அந்தச் சண்டை தொடங்கிய போதும் விடிசாமம் வரையும் அந்த நான்கு டோராக்களிடமிருந்தும் தன் படகுகளைப் பாதுகாத்து வியூகமிட்டுச் சண்டையிட்டுக் கொண்டிருந்தான். அவன் தொலைவில் உள்ள எங்கள் கரையிலிருந்து எப்போதும் போலவே இப்போதும் உதவியை எதிர்பார்ககவில்லை சண்டை தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது . நீண்டநேரம் கடந்து விட்டதால் படகொன்றில் எரி பொருள் தீர்ந்துபோக அந்தப் படகை நான்கு டோறாக்களும் சுற்றி முற்றுகையிட்டுக் கொண்டன. அவன் அப்போதும் உதவியை எதிர்பார்க்கவில்லை. சந்தர்ப்பத்தை சரியா பயன்படுத்தி டோராக்களை ஊடறுத்துப் புகுந்து தனது எரி பொருளில் பாதியை அந்த படகுக்கு வழங்கிச் சேதமில்லாமல் அந்த நான்கு டோறாக்களுக்கும் போக்குக் காட்டி கரைசேர்ப்பித்தான்.

அதனால் தான கடற்புலிகள் தளபதி சூசை அவர்கள் அவனைப் பற்றிக் குறிப்பிடும்போது ”எந்தச் சிக்கலான சண்டையெண்டாலும் நான் அவனிட்டையே கட்டளை வழங்கிற பொறுப்பை விட்டிடுவேன். ஏனெண்டா என்னை விட அவன் சிக்கலான சண்டையள்ள கூட தானும் பதட்டப்படாமல் போராளிகளையும் பதட்டமடையாமல் வைச்சு சண்டை பிடிச்சு வெற்றி கொள்ளிறதில திறமையானவன். இதில் அவனுக்கு நிகர் அவனே தான்'' என்றார்.

இந்தச் சிறமையான தளபதி தான் 07.10.1999 அன்றும் வழங்கல் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வழங்கல் படகுகளை நடுக்கடலில் டோறாப் படகுகள் வழிமறித்தபோது கரையிலிருந்து தனது கட்டளைப் படகுடன் இரண்டு படகுகளையும் அழைத்து கொண்டு கடற்களத்தில் இறங்கினான். இன்று கடல் கொந்தளிப்பாய் இருந்தது. கடும் இருள் கடல்வெளியினையே மறைத்துக்கொண்டிருந்தது . படகில் பொருத்தப்பட்டிருந்த கருவிகள் காலநிலைக் குழப்பத்தால் தங்களது பணியைச் செய்ய மறுத்துக் கொண்டிருந்தன. நிரோஜன் தன் நீண்டகால கடல் பட்டறிவினை மட்டுமே வைத்துப் படகினை நகர்த்தினான். வழங்கல் படகிற்கு எதுவும் நடந்துவிடக் கூடாது என்ற உறுதியுடன் படகை நகர்த்தினான். இடையில் துணைப்படகுகள் இரண்டும் இயந்திரக் கோளாரினால் மெது மெதுவாகவே நகர்த்து கொண்டிருந்தன. அவன் அவற்றை எதிர்பார்க்காமலேயே தனது கட்டளைப் படகை மட்டுமே வேகமாக சண்டை மூண்ட பகுதிக்கு நகர்த்தினான். அன்று அவன் சிங்களப்படைக்கு எதிராக மட்டுமல்ல இயற்கைக்கு எதிராகவுச் சண்டை பிடிக்க வேண்டியதாயிருந்தது.

அவன் எங்களின் வழங்கல் படகுளை நெருங்குகின்றான். அங்கே எங்களது ஒரு படகைக் காணவில்லை. அது டோறாவின் தாக்குதலில் சிக்கி மூழ்கியிருந்தது. ஆனால் அதில் வந்த உயிர்களுக்குச் சேதமில்லை. அவை பத்திரமாக மற்றைய படகில் இருந்தன. அவன் அந்த நிறைவுடன் தன் ஒரு படகை வைத்து எதிரியின் அதிகரித்த பலத்தை எதிர்கொண்டான் . கடல் இபபோதும் முரண்டு பிடித்துக் கொண்டிருந்தது. இருளுக்குள் டோறாவின் நிலைகள் அவன் கண்களுக்குள் தெரியவில்லை. வழங்கற்படகு மாத்திரம் கரை திரும்பிக்கொண்டிருந்தது. இப்போது நிரோஜனின் கட்டளைப் படகு எதிரியின் தாக்குதலில்  செயலற்றுக் கடலில் நின்று கொண்டிருந்தது. அவன் படகின் இயந்திரங்கள் மெளனமாய்க் கிடந்தன, எப்போதும் எந்தச் சாடையிலும் உதவியை எதிர் பார்க்காதவன் இன்று மட்டும் "எனர படகுக்குச் சேதம், முடிஞ்சா உதவி செய்யுங்கோ இல்லாட்டி பிரச்சனையில்லை' அவனின் அந்த வார்த்தைகள் தொலைத் தொடர்புக் கருவியில் கேட்டதும் துணைக்குச் சென்ற படகுகள் இரண்டும் தங்களால் இயன்ற மடடும் வேகமாக முயற்சித்து முன்னேறின. அங்கே அவர்கள் நிரோஜனின் படகை நெருங்கினார்கள். இப்போது அவர்களின் கரங்கள் தொய்ந்து போனது. கண்களால் வழிந்து நீரரும்புகள் உடலைவிட்டுத் துளித்துளியாய் படகுக்குள் விழந்தன. அந்த வீரன் கடற்புலி மரபுக்கேற்ப இறுதிவரை சண்டைபிடித்து தன் கடமையை நிறைவேற்றிய திருப்தியுடன் எரிந்து கொண்டிருந்த தோழர்களுடன்  படகோடு தீயில் சங்கமமாகிக் கொண்டிருந்தான்.

ஆக்கம்: மாரீசமைந்தன்
மூலம்: விடுதலைப் புலிகள் (பங்குனி - சித்திரை 2002)

Image
  • www.veeravengaikal.com
  • info@veeravengaikal.com

மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும்.

பின்தொடர்க..