அடிக்கற்கள்

தொடக்க காலத்தில் விடுதலை அமைப்பிற்கு வலுச்சேர்த்து விழிமூடியோரின் வரலாறுகள்

மேஜர் அல்பேட்

மேஜர் அல்பேட்

கந்தையா ரூபநிதி 
அச்சுவேலி - யாழ்ப்பாணம்

 நாம் ஏராளமான மரணத்தைக் கண்டுவிட்டோம். தோழர்களின் சாவு எம்மைப் பாதிக்காது. வீரமரணம் எமக்குப் பரீட்சையமானது. சாவைச் சந்திக்கத் தயாராக இருக்கின்றோம் என்றுதான் நாம் இறுமாந்திருந்தோம். ஆனால் உன் மரணத்தைச் சந்தித்தபோது எம் இதயம் உருக்குலைந்து தளர்ந்து, எம் உள்ளம் சூனியமாகியதை நாம் எப்படி வெளிபடுத்த முடியும்.

6 அடி 2 அங்குலமான உன் உயரமான (நீளமான) உடல் அசையாது கிடந்த நிலைகண்டு மக்கள் பதறியதை, உன் கிராமமே கலங்கியதைக் கண்டு உன்மரணம் தமிழ் மக்களை எந்த அளவுக்குப் பாதித்திருகின்றது என்பதை அறிந்து நாம் துடித்தோம்.

எம் முகாம்களில் ஒன்று இராணுவத்தினால் தாக்கப்படுகிறது என்பதை அறிந்து எம்மை விடுவிக்க விரைந்த நீ எம் அன்புப் பிணைப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு விட்டாய். கிராமச் சனங்களோடு பழகும் போது அந்தச் சனங்களோடேயே ஒன்றிப்போகும் உன் எளிமையான தோற்றம், எம்மை எல்லாம் பிரமிக்கச்செய்தது.

எம் புலம்பலை நிறுத்திவிட்டு அல்பேட்டைப் பற்றி….

பண்டிதர் ஆயுதக் கிடங்குகளுக்குப் பொறுப்பாக இருந்து வேலை செய்த காலத்தில் பண்டிதருக்கு அடுத்தபடியாக இருந்து வேலை செய்து இயக்கத்தின் நன் மதிப்பைப் பெற்றவன், ‘கந்தையா’ என்று செல்லமாக பண்டிதரால் அழைக்கப்பட்டவன். அச்சுவேலியில் நடைபெற்ற எம் தளம் மீதான இராணுவ முற்றுகையில் தன்னுடைய துப்பாக்கியில் இருந்த குண்டுகள் தீரும்வரை போராடி வெற்றிகரமாக வெளியேறியவன். பண்டிதரைப் பலிகொண்ட அந்தப் பெரிய முற்றுகையில் இருந்து வெற்றிகரமாக வெளியேறியதே அவனுடைய திறமைக்குச் சான்றாகும்.

பண்டிதரின் மறைவுக்குப் பின் ஆயுதக் கிடங்குகளின் பொறுப்பாளராகப் பணியாற்றி பண்டிதர் இழப்புக்கு ஈடு செய்தவன். 1982ம் ஆண்டு தொடக்கம் தன்னை எம் இன விடுதலைக்காக அர்பணித்துப் பணியாற்றியவன். அல்பேட்டை காணும் யாரும் போரிடுவதில் அனுபவம் மிக்கவன் என்பதை தவறின்றி ஊகிக்க முடியும். முதல் பார்வைக்கு அவன் வயது இருபதுக்கு மேல் இருபத்துநாலுக்கு உள்ளதாகவே இருக்கும் என்று தோன்றும். ஆனால் வெய்யிலிலும் காற்றிலும் அடிபட்டிருந்த அவன் முகத்தையும் கண்களின் அருகிலும் நெற்றியிலும், வாயின் பக்கங்களிலும் நுண்ணிய இழைகளாக விழுந்திருந்த சுருக்கங்களையும் சிந்தனையின் ஆழ்ந்தகளைத்த கருவிழிகளையும் உற்றுகவனித்தபின் அவன் வயதில் இன்னும் பத்து ஆண்டுகளைக் கூட்டலாம் போலிருக்கும்.

அல்பேட் கோபித்ததை, கோபப்பட்டதை நாம் காணவில்லை என்றே கூறலாம். ஏனோ தெரியவில்லை அவனுக்குக் கோபம் வருவதில்லை. நாம் சிலவேளைகளில் வேண்டுமென்றே சீண்டுவோம். அப்போதுகூட அவன் எருமை மாட்டில் மழைபெய்வது போல இருப்பான். அன்பினால் வழிநடத்தி, அரவணைப்பால் பாதுகாத்து, அவன் வளர்த்த அவனுடைய வீரர்கள், அல்பேட்டைப் போலவே உருவாகி இருப்பதைக் கண்டு வியப்புடன் அல்பேட்டுக்குத் தலை வணங்குகின்றோம்.

குழந்தைகள் என்றால் அல்பேட்டுக்கு அலாதி பிரியம். குழந்தைகளோடு பழகும்போது அவனும் ஒரு குழந்தையாகி மழலை மொழி பேசுவதைக் கண்டு நாம் சிரித்த பொழுதுகள் ஏராளம்.

எமது முகாம்களில் அல்பேட்டைச் சுற்றி ஒரு மழலைப்பட்டாளமே இருக்கும். அந்த சின்னஞ் சிறுசுகள், அல்பேட்டைக் காணாமல் தவித்த தவிப்புக்கள், அவர்களைப் பொறுத்தவரையில், அவன் கோவிலுக்குப் போய்விட்டான். கோவிலிலிருந்து வருவான். வரும்போது அவர்கள் அடிக்கடி கேட்ட, சொல்லிவிட்ட சாமான்கள் வேண்டி வருவான். அல்பேட் அவர்களை ‘குட்டிச் சாத்தான்’ என்று அழைப்பது வழக்கம் அந்தக் குட்டிச் சாத்தான்கள் அல்பேட் கோவிலுக்குப் போய்விட்டதை, போய்விட்ட செய்தியை மிகவும் சந்தோஷத்துடனும் மிகுந்த குதூகலத்துடனும் தமக்குள்ள பரிமாறிக்கொண்டார்கள்.

அவர்கள் அந்த மழலைகள், அல்பேட் கோவிலுக்குப் பொய் திரும்பி வருவான் என்பதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்….

யாழ் பொலிஸ் நிலையத் தாக்குதலின் போது இராணுவத் தந்திரத்துக்கமைய கோட்டையில் இருந்து எதிரிகளை வெளியில் வராமல் தடுக்கும் பொறுப்பும் கோட்டை மீதான தொடர்ந்த தாக்குதலை நடத்தும் பொறுப்பும் அல்பேட்டிடம் கொடுக்கப்பட்டிருந்தது. தனது பணியைச் செவ்வனே செய்துமுடித்து எமது வெற்றிக்கு வழிவகுத்தவன்.

ஒருநாள் விடியற்காலை அல்பேட் தன் முகாமில் உள்ள தோழர்களை தினசரி காலைப்பயிற்சிக்குத் தயார் படுத்திக் கொண்டிருக்கையில், தொலைத்தொடர்பு சாதனம் (வோக்கி ரோக்கி) அலறியது. அவன் வோக்கியை இயக்கி அழைத்த இடத்துடன் தொடர்பை ஏற்படுத்தியபோது, சுதுமலையில் உள்ள எமது முகாம் ஒன்று இராணுவத்தினரால் முற்றுகையிடப்பட்டும் செய்தி கிடைத்தது. அல்பேட் தன் தோழர்களைப் பார்த்து உரக்க அழைத்து விரைந்து, ஆயுதங்களுடன் வானில் (வாகனம்) ஏறி விரைந்தான். வான் இணுவில் பகுதியால் சுதுமலையை அண்மித்தபோது மூன்று ‘பெல் ஏ,பி, 412′ ரக ஹெலிகாப்டர்கள் அப்பகுதியை சுற்றிச் சுற்றி மெசின் கண்ணினால் குண்டுமழை பொழிந்து கொண்டிருந்தது.

மேலே வானத்திலே வட்டமிட்டுக்கொண்டிருந்த அலுமினியப் பறவைகளில் ஒன்று உயரத்தில் இருந்து பாய்ந்து மலையில் வழுகி வருவது போல மிகமிக வேகமாக வாகனத்தை நோக்கிப் பாய்ந்து வந்து ’50 கலிபர் மெசின் கண்’ணினால் சுட்டுத் தள்ளியது. குண்டு வரிசைகள் வாகனத்திற்கு மிக அருகாக நிலத்திலே கோடிட்டுச் சென்றது. குறிதவறிவிட்டது. அல்பேட் தன் தோழர்களைப் பார்த்து ‘டே தும்பியில் இருந்து சுடுறாங்கள் கவனமாக இருங்கோ’ என்று கூறி முடிக்கவும், (பெல் ஏ,பி, 412 ஹெலிகாப்டர்களை நாங்கள் ‘தும்பிகள்’ என்று அழைப்பது வழக்கம்) உருமறைப்பு வர்ணம் பூசப்பட்ட இன்னொரு அலுமினியத் தும்பி பக்கவாட்டாக தாழப்பறந்து வந்தது. “சுடப்போறான், வானை எங்காவது ஒருபுறம் திருப்பி ஒதுக்கு” என்று கத்தினான் அல்பேட். வான் ஒதுங்க அல்பேட் தோழர்களுடன் கீழே பாய்ந்த போது விமான எஞ்சின் கடகடப்புச் சத்தத்துடன் மெசின் கண்ணின் இடைவிடாத குண்டுச்சத்தத்துடன் தும்பி தாழப்பறந்து சென்றது. வானுக்கு முன்பாக குறுக்குப்பாட்டாக குண்டு வரிசை மண்ணிலே கோடிட்டது. குறி தவறிவிட்டார்கள். மறுபடியும் இன்னும் அருகாக அல்பேட்டும், வானும், சேதமின்றித் தப்பித்துக்கொண்டது.

அல்பேட் தன் “வோக்கி ரோக்கியுடன்’ முகாமுக்குத் தொடர்பு கொண்டபோது,

முகாமுக்கு பின்பாக ஹெலிகாப்டர்கள் இராணுவத்தினரை இறக்கிய தோட்டப்பகுதியான இடத்திற்குச் செல்லுமாறு பணிக்கப்பட்டது. குழு அவ்விடத்தை அணுகியபோது இராணுவக் கமாண்டோக்கள் தாம் இறங்கிய இடத்தில் சிலரை நிலைப்படுத்திவிட்டு, மற்றும் சிலர் முகாமை நோக்கி சென்றுகொண்டிருந்தனர்.

அல்பேட் கிளர்ச்சியுற்றான். ஆனால் அது சாவு குறித்த அச்சமில்ல. மிக, மிக வீரமுள்ள பதற்றமற்ற மனிதர்களுக்க இயல்பான ஒன்று. ஆபத்து பற்றிய முன்னுணர்வு தானும் இல்லை இது. அவன் கவலைப்பட்டது கமாண்டோக்களை எப்படியாவது தடுக்க வேண்டும்.

தோட்டங்களில் சில சில இடங்களில் மரவள்ளிச் செடிகள் மிக அழகாக செழிப்பாக செறிவாக வளர்ந்திருந்தது. உயர்ந்து செழிப்பாக செறிவாக வளர்ந்திருந்த மரவள்ளிப் பற்றைகள் ஒளியைப் புகவிடாமல் இருட்டைக் கொடுத்துக்கொண்டிருந்தன.

அல்பேட் தனது குழுவினர் சகிதம் அவர்களைத் தாக்கத் தொடங்கினான். இராணுவத்தினர் 2 அங்குல சிறிய மோட்டார் சகிதம் எதிர்த்தாக்குதல் நடத்தினர். முன்னேறிய இராணுவக் கொமாண்டோக்கள் மீதும் பலத்த தாக்குதல் நடத்தப்பட்டது. முன்னேறியவர்கள் மீதும் தாக்குதல், நிலைகொண்டு காவல் செய்துகொண்டிருப்பவர்கள் மீதும் தாக்குதல், வானத்தில் சுற்றிக்கொண்டிருந்து இவர்களுக்கு காவல் செய்யும் அலுமினியப் பறவைக்கும் தாக்குதல். பலமணி நேரம் இடைவிடாத தாக்குதல்.

கமாண்டோக்கள் பின்வாங்கத் தொடங்கினார்கள் பின்புறத்தில் அவர்களை விமானம் ஏறவிடாமல் செய்வதற்காக யமனைப் போல் நின்றுகொண்டிருந்தான் அல்பேட் எனவே அல்பேட் குழுவின் மேல் பலத்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

பலவர்ணம் பூசப்பட்ட பெல் ஏ,பி, 412′ ரக ஹெலிகாப்டர்கள் மூன்றும் தம்முடைய எம் 60 ரக மெசின் கண்ணாலும் வட்டமிட்டுத் தொடர்ந்து தாக்குதலை நடாத்தின. அல்பேட் குழுவினரை நோக்கி வந்த மோட்டார் குண்டுகள் வெடித்துக் கொண்டிருந்தன. திடீரென்று அல்பேட் சுருண்டு விழுந்தான். இடது கண்ணுக்கு கிழே பெரிய ஓட்டை அதிலிருந்து குருதி ஊற்றெடுத்துப் பாயும் நீர்த்தாரைகள் போல பாய்ந்தது. அல்பேட்டைத் தூக்கிக் கொண்டு சிலர் பின் விரைகின்றனர். அல்பேட்டுக்கு சிகிச்சை அளிப்பதற்கு முன்பாகவே அவன் தன் உயிரை இந்த மண்ணின் விடுதலைக்காக அர்ப்பணித்துவிட்டான்.

- கேணல் கிட்டு
மூலம்:
களத்தில் (தை 1986)

Image
  • www.veeravengaikal.com
  • info@veeravengaikal.com

மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும்.

பின்தொடர்க..